தமிழகம்

சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் பதவி: கவுன்சிலர்கள் கோரிக்கை மனு

ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை மகளிருக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மகளிர் கவுன்சிலர்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் 7 பேர் மகளிர். மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவராக எம்.எஸ்.திரவியம் உள்ளார். அண்மையில் புதிய மாவட்ட தலைவர் நியமனம் மற்றும் விண்ணப்பம் விநியோகம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதற்கு ஏராளமான மாவட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரை மாற்றக்கோரி மாவட்ட தலைவரும், சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவருமான எம்.எஸ்.திரவியம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் டெல்லி சென்று முக்கிய தலைவர்களை சந்திக்க முயன்றனர். பின்னர் முடியாமல், கட்சியின் தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து, செல்வப்பெருந்தகையை மாற்ற வலியுறுத்தி மனு அளித்திருந்தனர். இதனிடையே சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 6 பேர் ஏற்கெனவே செல்வப்பெருந்தகையை சந்தித்து, எம்.எஸ்.திரவியத்தை, மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை, காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் சுகன்யா செல்வம், அமிர்தவர்ஷினி, பானுமதி, தனலெட்சுமி, சுபாஷிணி, சுமதி ஆகியோர் இன்று (மார்ச் 16) நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், 'எம்.எஸ்.திரவியம் மாநகராட்சி மன்ற தலைவர் பொறுப்பில் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, மகளிர் கவுன்சிலர்கள் அதிகமாக உள்ள நிலையில், அவர்களுக்கே அப்பதவியை வழங்க வேண்டும்' கூறப்பட்டுள்ளது. இது குறித்து கிரிஷ் சோடங்கரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "இது உட்கட்சி விவகாரம். மகளிர் கவுன்சிலரின் கோரிக்கைகள் குறித்து கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தீர்வு காணப்படும்" என்றார்.

17 காங்கிரஸ் மகளிர் கவுன்சிலர்கள்: சென்னை வந்துள்ள தமிழகத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை இன்று நேரில் சந்தித்து, மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை மகளிருக்கு வழங்க வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT