நாறும்பூநாதன் 
தமிழகம்

எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

எஸ். அசோக்குமார்

திருநெல்வேலி: தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான இரா.நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64.

தமிழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தம்மாள் தம்பதியின் மகனான நாறும்பூநாதன் கழுகுமலையில் பிறந்தார். நாறும்பூநாதனின் மனைவி சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணத்துக்கு பின்னர் திருநெல்வேலியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் ராமகிருஷ்ணன் கனடாவில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது நாறும்பூநாதனுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர், திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவரது மரணம் எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாறும்பூநாதன் முதுநிலை கணிதம் பயின்றுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எழுதியுள்ளார். முற்போக்கு இலக்கிய மரபைப் பின்பற்றும் நாறும்பூநாதன் திருநெல்வேலியை மையமாக வைத்துப் பல யதார்த்தமான படைப்புகளைத் தந்துள்ளார்.

SCROLL FOR NEXT