தமிழகம்

தமிழக வேளாண் பட்ஜெட் 2025: வரவேற்பும் விமர்சனமும்

செய்திப்பிரிவு

தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அண்ணாமலை, ராமதாஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை: வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023-ம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத் துறை அமைச்சர் கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் உழவர்களுக்கு உதவும் வகையில் 1000 உழவர் நலச் சேவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், கோடை உழவு ஊக்குவிக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரம், வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான பாசனத் திட்டங்களை செயல்படுத்த எந்த திட்டத்தையும் அறிவிக்காதது ஏமாற்றம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வரும் நிதியாண்டில் ரூ.1,427 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, விவசாயிகள் பயனடையும் வகையில், உறுதியான வாழ்வாதாரத்தை அடையும் வகையில் இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. விபத்து மரணத்துக்கு ரூ.5 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கு ரூ 3 லட்சமாகவும் நிவாரணத்தை உயர்த்துதல், உழவர் பாதுகாப்பு திட்ட அட்டையில் உள்ள முதன்மை உறுப்பினர்களுடன், சார்பு உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் பரிசீலித்திருக்கலாம்.

தமாகா தலைவர் ஜி.கே வாசன்: வேளாண் பட்ஜெட்டில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கான முக்கிய அம்சங்கள் இடம் பெறவில்லை. விவசாயிகள் எதிர்பார்த்த கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெறாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் அடங்கியதாக இருக்க வேண்டிய வேளாண் பட்ஜெட் அறிக்கை, அவர்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்கும் வெற்று அறிக்கையாக அமைந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இடம்பெறாத வெற்று அறிக்கையாகவே அமைந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: வேளாண் பட்ஜெட், வெத்துவேட்டு அறிக்கையாக, விளம்பர அறிக்கையாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்: மானாவாரியில் உழவு மானியமாக 3 லட்சம் ஏக்கருக்கு தலா ரூ.2,000 அறிவிக்கப்பட்டுள்ளது போன்ற பல அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேநேரத்தில், விவசாயிகளின் அடிப்படை பிரச்சினையாக உள்ள வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்படியான விலை கொடுப்பதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் உள்ளது ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக நெல் குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 விலை கொடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட்டிலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT