பல துறைகளை இணைத்து அவியல் கூட்டு போன்றதொரு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுகவினர் விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு பொருத்தமான உதாரணமே திமுக அரசின் வேளாண் பட்ஜெட். விவசாயத்துக்கு தனி பட்ஜெட்டின் போலி தோற்றம் நிரூபணமாகியிருக்கிறது. 5-வது முறையாக 1.45 நேரம் பட்ஜெட்டை வாசித்ததுதான் இவர்களின் சாதனை. விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. ஏமாற்றமே உள்ளது.
வேளாண்துறை சார்ந்த பால்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை என பல துறைகளை ஒன்றாக இணைந்து அவியல் கூட்டுப்போல் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஆட்சியின் உணவு பதப்படுத்தும் பூங்கா, குடிமராமத்து, அத்திக்கடவு அவினாசி போன்ற திட்டங்களை கைவிட்டனர். திமுக ஆட்சியில் முளைக்காத விதை, பயனில்லாத உரங்கள் என தவறு செய்ய வசதியான திட்டங்களே உள்ளன. இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்டை ஆராய்ந்தால், இயற்கை வேளாண்மைக்கு ரூ.100 கோடி அறிவித்தது நின்றுவிட்டது. சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்துவதாக கூறினார்கள். ஆனால் 1.2 சதவீதம் குறைந்து தான் இருக்கிறது.
இருபோக சாகுபடி பரப்பை உயர்த்த திமுக அரசிடம் திட்டமில்லை. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களின் உற்பத்தி குறைந்துவிட்டது. 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்வோரை பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மையில்கூட திமுக அரசு ஊழல் செய்கிறது. விவசாயிகளுக்கான 24 மணி நேர மின்சாரத்தையும் பறித்துக் கொண்டனர். விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயமில்லை என்பது வருத்தமளிக்கிறது. நிதி மேலாண்மைக் குழுவின் அறிக்கையை அரசு வெளியிட மறுக்கிறது. குழு அமைத்த பின்னர்தான் திமுக அரசு நிறைய கடன் வாங்கியுள்ளது. அரசு கடனில் மூழ்கி கொண்டிருக்கிறது. எந்த திட்டத்தையும் கடன் வாங்காமல் அமல்படுத்த முடியாத சூழல் உருவாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.