தமிழகம்

“துரைமுருகன் பேசியது இந்தியப் பெண்களின் கண்ணியம் மீதான தாக்குதல்” - மன்னிப்புக் கோர வானதி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் பெண்களைக் குறித்து இழிவாக பேசுவது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, “திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன், பெண்களைக் குறித்து இழிவாக பேசுவது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது. அவர், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில், மோசமான, இழிவான கருத்தை தெரிவித்துள்ளார். “ஐந்து ஆண்கள் ஒரு பெண்ணை மணப்பார்கள்" என்ற அவரது அருவருப்பான பேச்சு நமது இந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், பெண்கள் மீதான திமுகவின் அவமதிப்பையும் அம்பலப்படுத்துகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் இந்த மோசமான கருத்தை நியாயப்படுத்துவார்களா?

இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் பெண்களை வெளிப்படையாக அவமதிப்பதைக் கண்டிக்கத் துணிவார்களா? அல்லது தங்கள் கூட்டணி கட்சியினரை காப்பாற்ற மவுனமாக இருப்பார்களா? இது திமுகவின் வழக்கமான வெறுப்பு அரசியல் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியப் பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல். இந்த நாட்டின் பெண்கள் சார்பாக, பாஜகவின் மகிளா மோர்ச்சா இந்த பெண் வெறுப்பு வெளிப்பாட்டிற்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, வட இந்திய கலாச்சாரத்தை அருவருப்பானது என்று திமுக அமைச்சர் துரை முருகன் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்கிற நாற்றம்பிடித்த நாகரிகம் கொண்டவர்கள் வட இந்தியர்கள்; இப்படியான நாகரிகம் கொண்ட வட இந்தியர்கள், தமிழரின் நாகரிகம் பற்றி பேசினால் தமிழன் நாக்கை அறுத்துவிடுவான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Shocking & disgraceful! A senior DMK Minister, @katpadidmk, has stooped to the lowest depths of misogyny, making a vile, degrading remark that insults the dignity of women. His disgusting statement “five men will marry one woman” not only demeans our Indian culture but exposes… https://t.co/8l6fMbH6zN

SCROLL FOR NEXT