கோப்புப் படம் 
தமிழகம்

சென்னையில் மழைவெள்ள நீரை சேமிக்க ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: கோவளம் அருகே 4,375 ஏக்கரில் அமைகிறது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மழைவெள்ள நீரை சேமிக்கும் வகையில், 4,375 ஏக்கர் நிலப்பரப்பிலான புதிய நீர்த்தேக்கம் கோவளம் அருகே ரூ.350 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் மக்கள்தொகை பெருகிவரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக திருப்போரூர் வட்டம் கோவளம் அருகே உள்ள பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளுக்கு இடையே 4,375 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது.

இந்த நீர்த்தேக்கமானது ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையிலும் 1.6 டிஎம்சி கொள்ளவுடன் ரூ.350 கோடியில் அமைக்கப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு கிடைக்கும் 170 எம்எல்டி குடிநீரை கொண்டு சென்னை வாசிகளின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்படும்.

தமிழகத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையில் வரும் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டம் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை ஆய்வு செய்தல், புதிய நீர்ப்பாசனக் கட்டுமானங்களை அமைத்தல், ஏற்கெனவே உள்ள நீர்ப்பாசனக் கட்டுமானங்களை புதுப்பித்தல், நீர்நிலைகளைப் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் நீர்வளத் துறைக்கு ரூ.9,460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வளமான கடல் சூழல் அமைப்புகளை பாதுகாக்கும் வகையில் அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு, நவீன மீன்பிடி நடைமுறைகள் அறிமுகம் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ.50 கோடியில் ‘கடல்சார் வள அறக்கட்டளை’ உருவாக்கப்படவுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புதுப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் பேட்டை ஆகிய 6 கடற்கரைகளுக்கு ரூ.24 கோடி மதிப்பீட்டில் நீலக்கொடி சான்று பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

SCROLL FOR NEXT