கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சின்னநற்குணம் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமம், மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீ தூரம் உள்ளடங்கிய கிராமமாகும்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 3 கி.மீ தூரம் நடந்து சென்று எறும்பூர் கிராம பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்து ஏற வேண்டும். நாள்தோறும் இப்படி நடந்தே சென்று, பேருந்து பயணத்தை மேற்கொள்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் சின்னநற்குணம் கிராமத்துக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.
“இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை” என்று இக்கிராம மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னநற்குணத்தில் இருந்து எறும்பூர் சென்று, அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்கின்றனர்.
“முக்கியமான காலை, மாலை நேரங்களில் மட்டுமாவது பேருந்தை இயக்க வேண்டும் மிக அவசியம்” என்று இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். “குறுகலான சாலையாக இருப்பதால், பேருந்தை நிறுத்தி விட்டார்கள். சாலையை சற்று அகலப்படுத்தி, பேருந்தை இயக்க வேண்டும்” என்று கிராம மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
பெரிய அளவு கலெக்ஷன் இல்லை என்று மினி பேருந்துகளை இயக்கி தனியார் நிர்வாகத்தினர் கைவிட்டு விட்டனர். ஆனால், அரசு போக்குவரத்து கழகமும் இப்படி கைவிட்டது மிக தவறு” என்று விவரமறிந்தவர்கள் சின்னநற்குணம் மக்களுக்காக பரிந்து பேசுகின்றனர்.
அண்மையில், பேருந்துகளே செல்லாத கிராம பகுதிக்கு சிற்றுந்துகளை இயக்கும் வகையில் ‘சிற்றுந்து திட்டம்’ குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, அதற்கான வழித்தடங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. இதில் இந்த சின்னநற்குணம் கிராமமும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சேர்க்கப்பட்டால் நாள்தோறும் போக 3, வர 3 என 6 கி.மீ நடக்காமல், பக்கத்து கிராமத்துக்கு சென்று காத்திருக்காமல் இக்கிராம மக்கள் பழையபடி பேருந்தில் ஏறி பயணிக்கலாம்.