தமிழகம்

தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் தொடரும் இழுபறி

செய்திப்பிரிவு

தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் இழுபறி நீடித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, தவெக தலைவர் விஜய்யிடம் மனு அளிக்க வந்த பெண்ணுடன் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தவெகவில் அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்ள் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 95 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இறுதிகட்டமாக 25 மாவட்டச் செயலாளர்களை விஜய் நேற்று அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வகையில், நிர்வாகிகளை நேர்காணல் செய்து பொறுப்புகளை அறிவிப்பதற்காக கட்சித் தலைவர் விஜய் பனையூரில் உள்ள தலைமையகத்துக்கு நேற்று வருகை தந்தார். தொடர்ந்து, 25 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை அறிவிக்க வேண்டிய நிலையில் கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை மட்டுமே விஜய் இறுதி செய்தார். அதில், சென்னை தெற்கு மேற்கு மாவட்டச் செயலாளராக விஜய்யின் உதவியாளர் மகன் சபரிநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகவும், சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நல்ல செய்தி: இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சபரிநாதனின் தந்தை 35 ஆண்டுகளாக தலைவரோடு பயணித்தவர். சபரிநாதனும் சிறு வயது முதலே ரசிகராக இருந்து, பெயர்ப்பலகை திறந்து வைப்பது உள்ளிட்ட பணிகளை ஆற்றியுள்ளார். அந்த வகையில் தலைவரின் ரசிகர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளோம். தலைவர் உழைத்தவர்களை அடையாளம் கண்டு பதவி வழங்கியுள்ளார். எனினும், ஒரு சிலர் வேண்டுமென்றே சலசலப்பை உண்டாக்க நினைக்கின்றனர். அது தவெகவில் நடக்காது. மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். அதைத் தொடர்ந்து நல்ல செய்தி ஒன்று வெளியாகும்" என்றார்.

பரபரப்பு: இதற்கிடையே, பனையூரை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுதா என்ற பெண் தன் மகனுடன் தவெக தலைமையகத்துக்கு வருகை தந்தார். அவர் விஜய்யை சந்திக்க நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. தான் எந்த கட்சியையும் சேர்ந்தவரல்ல எனவும், விஜய் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் எனவும் அப்பெண் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க முற்பட்டபோது, அவரை சூழ்ந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், டிவிகே என கோஷமிட்டனர். இவரை மாற்றுக் கட்சியினர் அனுப்பி வைத்ததாக தவெகவினர் குற்றம்சாட்டி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT