தமிழகம்

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் சொல்வது என்ன?

செய்திப்பிரிவு

பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திர கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆராதனை விழாவில் பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் நேர்த்திக்கடனாக அங்கப்பிரதட்சணம் செய்வது வழக்கம். இதற்கு உயர் நீதிமன்றம் 2015-ல் தடை விதித்தது.

கடந்த ஆண்டு விழாவின்போது எச்சில் இலையில் அங்கப்பிரதட்சனம் செய்ய அனுமதி கோரி கரூரைச் சேர்ந்த நவீன் குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, "பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை இல்லை" என உத்தரவிட்டார். இதையடுத்து, எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடந்தது.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் கரூர் மாவட்ட ஆட்சியர் தரப்பிலும், திருவண்ணாமலை கோயில் அர்ச்சகர் அரங்கநாதன் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், "உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்ததை மறைத்து, மனுதாரர் சாதகமான உத்தரவைப் பெற்றுள்ளார். இதை பலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்கவும் வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் உள்ள குக்கே சுப்பிரமணியா கோயிலில் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய உச்ச நீதிமன்றம் 2014-ல் தடை விதித்தது. இதன் அடிப்படையில் கரூர் சதாசிவ பிரம்மேந்திர கோயிலில் நடைபெறும் அங்கப்பிரதட்சணத்துக்கு உயர் நீதிமன்ற அமர்வு 2015-ல் தடை விதித்தது. அந்த உத்தரவில் `மதத்தின் பெயரால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க, வழங்கங்களால் தனி மனிதர்கள் தாழ்த்தப்படக் கூடாது. எனவே, எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கக் கூடாது' எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இறுதியானது. இதற்கு எதிராக யாரும் மேல்முறையீடு செல்லவில்லை. இந்த உத்தரவின் அடிப்படையில்தான் கடந்த 9 ஆண்டுகளாக அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்து, அனுமதி பெறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனடிப்படையில் உயர் நீதிமன்ற அமர்வும் தடை விதித்துள்ளது. இதை தனி நீதிபதி செல்லாதாக்க முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது வழிபாட்டு உரிமையாக இருந்தாலும், அது சுகாதாரத்துக்கும், மனித மாண்புக்கும் உகந்ததல்ல. எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உருளு சேவை தொடர்பான உரிமையியல் மேல்முறையீடு வழக்கின் முடிவுக்காக அனைவரும் காத்திருக்க வேண்டும். அதுவரை, எச்சில் இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பழக்கத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT