எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை தடுக்க தவறியதைக் கண்டித்து, கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்கப் போவதாக இலங்கை மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து சிலுவைப் பாதை, சிறப்பு திருப்பலி, தேர்பவனி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாளை காலை கூட்டுப் பிரார்த்தனைக்கு பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும். இதையொட்டி நேற்று கொடிமரம் நிறுவப்பட்டது.
விழாவில் பங்கேற்க இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வட மாகாண மீனவ சங்கத் தலைவர் வர்ணகுலசிங்கம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, "இலங்கை கடல் பகுதியில், இந்திய விசைப்படகுகள் அத்துமீறி நுழைந்து, சட்ட விரோதமாக மீன்பிடித்துச் செல்கின்றன. இதனால், இலங்கையின் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் சந்தித்து பேசிய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகாணவில்லை. இதைக் கண்டித்து இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை இலங்கை மீனவர்கள் புறக்கணிக்கிறோம்" என்றார்.
இலங்கையில் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தனர். இந்நிலையில், இலங்கை மீனவர்கள் இந்த ஆண்டு திருவிழாவை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.