சென்னை: டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறைந்தது ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மது விற்பனையில் 40 சதவீதம் கணக்கில் காட்டப்படவில்லை என்பதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும், ஊழல் பணம் ரூ.1,000 கோடியில் சிறு பகுதி மட்டும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சென்றிருப்பதாகவும், மீதமுள்ள பணம் யாருக்குச் சென்றது என்பது குறித்து விசாரணை நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுப்புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. இந்த வகையில் தினமும் ரூ.10 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.3,650 கோடி வரை ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இவைதவிர ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மது பெட்டிக்கு ரூ.50 வீதம் லஞ்சம் பெறப்படுவதாகவும், இந்த வகையில் ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை ஆட்சியாளர்களுக்கு கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு உண்டு.
அதனால் தான் டாஸ்மாக் ஊழல்களை விசாரிக்க கோருவதை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அமலாக்கத் துறை சோதனையில் தெரியவந்துள்ள ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார் என்பதை மக்களுக்கு தெரிவித்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். தமிழக காவல்துறை அதை செய்யும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை. எனவே, டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.