வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் வழியில் செம்பட்டி-வத்தலக்குண்டு இடையே தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், மக்கள் எதிர்ப்பு காரணமாகப் பயன்பாட்டுக்கு வராமலேயே இருந்தது.
இங்கு நான்குவழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மார்ச் 12-ம் தேதி (நேற்று) சுங்கச்சாவடியைத் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சுங்கச்சாவடி செயல்பாடம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எனினும், மக்கள் எதிர்ப்பை மீறி நேற்று காலை 8 மணிக்கு சுங்கச்சாவடி செயல்படத் தொடங்கியது. வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அங்கு திரண்ட கிராம மக்கள், சுங்கச்சாவடியின் கண்ணாடிகள், கணினி, பில்லிங் இயந்திரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டன. சுங்கச்சாவடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், பெண்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் திண்டுக்கல்-தேனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன், நிலக்கோட்டை வட்டாட்சி்யர் விஜயலட்சுமி ஆகியோர், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.