தமிழகம்

சிலை கடத்தல் குறித்து விசாரித்த பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்தது ஏன்? - சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

மதுரை: நீதிமன்ற உத்தரவுபடி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அனுமதி பெறாமல் வழக்கு பதிவு செய்தது ஏன் என்று சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். சிலை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி தீனதயாளனை தப்பவைக்க பொன் மாணிக்கவேல் உதவியாக புகார் செய்த முன்னாள் டிஎஸ்பி காரத்பாட்ஷா, பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி, புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டார். அதன்படி சிபிஐ விசாரணை நடத்தி பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து, மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முதல்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

முதல்கட்ட விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "சிலை கடத்தல் வழக்குகளை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். உரிய தகவல்கள் இல்லாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான தகவல்கள் இல்லாமல் எப்படி எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்? யார் மீது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் போதுமான தகவல்கள் இல்லாமல் சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியுமா?" என்றார்.

பின்னர் சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலர்கள் காணொலி வழியாக ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT