ராமேசுவரம் கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள சரக்கு கப்பல். 
தமிழகம்

ராமேசுவரம் கடற்பகுதியில் 4 நாளாக 3 சரக்கு கப்பல்கள் காத்திருப்பு

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பாம்பன் ரயில்வே தூக்குப் பாலங்கள் திறப்புக்காக ராமேசுவரம் கடற்பகுதியில் நான்கு நாட்களாக 3 சிறிய ரக சரக்கு கப்பல்கள் காத்துக் கிடக்கின்றன.

கொல்கத்தா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, சென்னை உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் துறைமுகங்களிலிருந்து சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் பாலங்களை கடந்து மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கும் செல்கின்றன.அதுபோல, தூத்துக்குடி, கன்னியாகுமாரி தென்பகுதி துறைமுகங்கள், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி துறைமுகங்களிருந்து வங்காள விரிகுடா கடற்பகுதிக்குச் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் ரயில், சாலை பாலங்கள் வழியாக தான் பயணித்து வருகின்றன.

கடந்த மே மாதம், புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகளுக்காக சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் விசைப்படகுகள் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதற்கு அனுமதி நிறுத்தப்பட்டு, பாம்பன் ரயில் தூக்குப் பாலம் வழியாக பயணிக்கும் சிறிய கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தனுஷ்கோடி மணல் தீடைகள் வழியாக கடந்து செல்கின்றன. இந்நிலையில், கொல்கத்தாவிலிருந்து குஜராத் செல்வதற்காக மூன்று சிறிய ரக சரக்கு கப்பல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் கடற்பகுதிக்கு வந்தது.

பாம்பன் ரயில்வே தூக்குப் பாலங்கள் திறப்பதற்கான அனுமதி கிடைக்காததால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலிலிருந்து 6 நாட்டிகல் மைல் தொலைவில் இந்த கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளன. இந்த மூன்று கப்பல்களில் 30 மாலுமிகள் உள்ளனர். அனுமதியின்றி ராமேசுவரம் கடற்பகுதியில் கப்பல்கள் நிறுத்தப்பட்டதால் கடற்படை மற்றும் மெரைன் போலீஸார் மூன்று கப்பல்களுக்கு சென்று ஆய்வு செய்ததுடன், கப்பல் கேப்டன், மாலுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இப்பகுதியில் கப்பல்களை அனுமதியின் நிறுத்தக்கூடாது என்று எச்சரித்ததுடன், கப்பல்களை ஆழமான கடற்பகுதிக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தினர். தனுஷ்கோடி மணல் தீடைகள் பகுதியில் நீரோட்டம், மணல் திட்டுகள் இருப்பதால் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இதில் சிக்கி தரைதட்டவும், சேதமடையும் அபாயமும் உள்ளது. மேலும் சுற்றிச் செல்வதால் எரிபொருளும் அதிகளவில் செலவாகும்.

தற்போது புதிய பாம்பன் பாலம் பணிகள் நிறைவடைந்துள்ளதால், படகுகள், கப்பல் கடந்து செல்ல பழைய மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலங்களை திறக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT