சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இசைக்கல்லூரி அருகே சாலை பணிக்காக மரங்கள் வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில பசுமைவழிச் சாலை - துர்காபாய் தேஷ்முக் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் பசுமைவழிச் சாலை வழியாக அடையார், கிண்டி பகுதிகளுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.26 கோடியில் சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு, பசுமைவழிச் சாலையில் இருந்து, இசைக்கல்லூரி வழியாக எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரி அருகில் துர்காபாய் தேஷ்முக் சாலையில் இணையும் வகையில் மாற்று வழி அமைக்கப்பட உள்ளது. இந்த வழியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.
இந்த சாலை பணிக்கான உபகரணங்களை கொண்டு செல்ல ஏதுவாக 5-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்காக மரங்களை வெட்ட, அரசின் மாவட்ட பசுமை குழுவிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதில் 12 மரங்களை வேரோடு அகற்றி, வேறு இடத்தில் நடவும், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கு இணையாக 10 மரங்கன்றுகளை நட வேண்டும் என மாவட்ட பசுமைக்குழு நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
சாலை பணிகளுக்காக அப்பகுதியில் மரங்களை வெட்ட, அங்கு வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் ஜெயஸ்ரீ கண்ணன் கூறும்போது, இப்பகுதி குளுமையாக இருக்க இந்த மரங்கள் தான் காரணம். அவற்றில் ஏராளமான பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன. அதனால் இந்த மரங்களை வெட்டக்கூடாது.
தற்போது வெட்டிய மரங்களில் இருந்து கூடுகளை இழந்து பறந்து சென்ற பறவைகளை பார்க்கும்போது கடும் வேதனைக்கு உள்ளாகிறோம். நமது சுயநலத்துக்காக அவற்றின் வாழ்விடங்களை அழிக்க கூடாது. இவர்கள் வைக்கும் 10 மரக்கன்றுகள் வளரும் வரை இந்த பறவைகள் எங்கு வாழும். அதனால் இந்த மரங்களை வெட்டக்கூடாது. மாற்று வழியில் பாதை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.