தமிழகம்

ரூ.20 லட்​சம் வழிப்​பறி வழக்​கில் கைதான சிறப்பு எஸ்​ஐ இரு​வருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தரவு

செய்திப்பிரிவு

சென்னை: வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ-க்கள் இருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிச.15-ம் தேதி தனியார் நிறுவன ஊழியரான முகமது கவுஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிறப்பு எஸ்.ஐ-க்கள் ராஜாசிங், சன்னிலாய்டு மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற 4 பேருக்கும் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இவர்களை திருவல்லிக்கேணி போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கெனவே ஆயிரம் விளக்கு பகுதியில் தமீம் அன்சாரி என்பவரிடம் ரூ. 20 லட்சத்தை கடந்த டிச.11-ம் தேதி வழிப்பறி செய்தது தெரியவந்தது.

அதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு எஸ்.ஐ-க்கள் ராஜாசிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோருடன் வணிகவரித்துறை அதிகாரிகளான சுரேஷ், சதீஷ், பாபு ஆகியோர் மீதும் ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

இந்நிலையில், ஆயிரம் விளக்கு போலீஸார் பதிவு செய்துள்ள வழிப்பறி வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி சிறப்பு எஸ்ஐ-க்களான ராஜாசிங், சன்னிலாய்டு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், இருவரும் 80 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, சிறப்பு எஸ்ஐ-க்களான சன்னிலாய்டு, ராஜாசிங் ஆகிய இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT