சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் ஏதாவது குற்றங்கள் நடைபெற்றால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் அறிவுறுத்தி உள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்), தமிழக ரயில்வே காவல்துறை ஆகியவற்றின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: “மாணவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருக்க வேண்டும். அதேநேரத்தில், நண்பன் தவறு செய்யும்போது, அதை ஊக்கப்படுத்தாமல் தட்டிக் கேட்க வேண்டும். மாணவர்கள் நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
ரயில் நிலையங்கள், ரயில்களில் ஏதாவது குற்றங்கள் நடைபெற்றால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில், குற்றத்தில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக இருக்கக் கூடாது. ரயிலில்களில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டோ, மேற்கூரையில் நின்றபடியோ ஆபத்தான முறையில் பயணிக்கக் கூடாது. கல்லூரியில் படிக்கும் 3 ஆண்டுகளில் கடின உழைப்பை கொடுத்தால் எதிர்காலம் நன்றாக மாறும். எனவே, லட்சியத்தை மனதில் விதைத்து, இப்போதிலிருந்தே செயல்படத் தொடங்குங்கள்,” என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில்,சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் ராம கிருஷ்ணா பேசுகையில், “கல்லூரியில் படிக்கும் காலத்தில் நமது நேரத்தை சரியாக பயன்படுத்தி, முறையாக படித்தால் உயர்ந்த லட்சியத்தை எட்டலாம்” என்றார். நிகழ்ச்சியில், ஆர்பிஎஃப் உதவி பாதுகாப்பு ஆணையர் ராஜய்யா, ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர்கள் சக்திவேல், கர்ணன், மாம்பலம் ஆர்பிஎஃப் ஆய்வாளர் பர்சா பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.