பசுமை வளத்தை அதிகரிக்கும் வகையிலும், இயற்கை எழிலூட்டும் வகையிலும் சென்னையில் உள்ள பல்வேறு மேம்பாலங்களில் உள்ள தூண்களில் சிறிய வகை செடிகள் அடுக்கி வைக்கப்பட்டது. இதற்காக பிரத்யேக இரும்பு வளையம் அமைக்கப்பட்டு அதில் செடிகள் வரிசையாக மேலிருந்து கீழாக அடுக்கி வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. மேலும், இவற்றுக்கு தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு பராமரிக்கப்பட்டும் வந்தது.
அதேபோல் சென்னை அடையாறு திரு.வி.க பாலம் அருகே உள்ள (அடையாறு மேம்பாலம்) மேம்பாலத்தில் 10-க்கும் மேற்பட்ட தூண்களில் செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது. தற்போது, அவை பராமரிக்கப்படாமல் அனைத்து செடிகளும் வாடி சிதிலமடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கின்றன. அதோடு மட்டும் அல்லாமல் பல செடிகள் பூந்தொட்டியோடு கீழே விழுந்து முற்றிலும் சேதம் அடைந்து விட்டன.
இதனால், பாலத்தில் செடி அமைக்க பயன்படுத்திய இரும்புகள் மட்டுமே உள்ளது. அந்த இரும்பும் கூட பல தூண்களில் அகற்றப்பட்டு அவை, அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்யும் இடமாக மாறி விட்டது. எனவே, இதை உடனடியாக சரி செய்து பழையபடி அடையாறு மேம்பாலத்தின் தூண்களில் பசுமை செடிகளை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.