கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயம் 
தமிழகம்

கச்சத்தீவு திருவிழா: பைபர் படகுகளுக்கு அனுமதி கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மீனவர்கள் மனு

எஸ். முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு பைபர் படகுகளை அனுமதிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமேசுவரம் ஓலைக்குடா கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பட்டங்கட்டி சமுதாயம் சார்பாக அளிக்கப்பட்ட மனுவின் விவரம் வருமாறு, 1913-ம் ஆண்டில் ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப் பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் மீனவர்களின் பாதுகாவலரான அந்தோணியாருக்கு ஆலயம் ஓலைக்குடிசையில் கட்டப்பட்டது.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும் பெருமளவு மீன் கிடைக்கவும் இங்கு நாட்டுப் படகுகளில் சென்று மீனவர்கள் வேண்டிக் கொள்வோம். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவிற்கும் கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகில் சென்று வந்து கொண்டிருக்கின்றோம்.

தற்போது காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு நாங்கள் மாறிவிட்டோம். உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பைபர் படகில் கச்சத்தீவு திருவிழா செல்வதற்கு தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து அனுமதிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கேற்ப எதிர்வரும் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரம் ஓலைக்குடா அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT