படம்: எம். சாம்ராஜ் 
தமிழகம்

சர்வதேச கடல் எல்லையை கடப்பதால் ஏற்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு: புதுச்சேரி ஆளுநர் தகவல்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சர்வதேச கடல் எல்லைக்கோட்டை கடப்பதால் ஏற்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மீனவர்கள் அந்தமான் கடலை நோக்கி செல்ல ஊக்குவிக்கவுள்ளோம் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ராஜ்நிவாஸில் இருந்து வந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு பேரவைத்தலைவர் செல்வம் பூங்கொத்து தந்து வரவேற்றார். அதையடுத்து பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

பின்னர் பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக ஆளுநர் கைலாஷ்நாதன் வந்து தனது உரையை வாசிக்கத்தொடங்கினார். அதன் முக்கிய அம்சம்: ஃபெங்கல் புயலுக்கு புதுச்சேரி அரசு இதுவரை ரூ.207 கோடி மொத்தமாக வழங்கியுள்ளது. நாட்டிலேயே இதுவரை விரைவாக வழங்கப்பட்ட நிவாரணங்களில் இதுவும் ஒன்று. பட்ஜெட் மதிப்பீடு கடந்த ஆண்டை விட ரூ.535 கோடி சேர்த்து வரும் நிதியாண்டில் திருத்திய மதிப்பீடாக ரூ.13,235 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளில் 2444 அரசுப் பணியிடங்கள் உட்பட தனியார் நிறுவனங்களையும் சேர்த்து 21,792 பேர் நிரப்பப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பின்னை கடந்த 2020-21ல் 6.7 சதவீதத்திலிருந்து இருந்து 2024-25ல் 4.3 சதவீதமாக குறைந்துள்ளது. புதுச்சேரியில் 78 குளங்களை சீரமைத்து புதுப்பிக்க ரூ.750 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தில் 90% மானியம் பெற சமர்பிக்கவுள்ளோம். ஸ்மாரட் சிட்டி திட்டத்தில் ரூ.175 கோடி பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள ரூ.445 கோடி பணிகள் நடந்து வருகிறது.

தனிநபர் வருமானம் நடப்பு நிதியாண்டில் 5.33 சதவீதம் அதிகரித்துள்ளது. மலிவு விலை மருந்தகம் தொடங்க 15 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. அதில் தவளக்குப்பம் சங்கம் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. சர்வதேச கடல் எல்லைக்கோட்டை கடப்பதால் ஏற்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வை காண ஆழ்கடல் மின்பிடி கொள்கை மூலம் தர அரசு உத்தேசித்துள்ளது. மீனவர்கள் அந்தமான் கடலை நோக்கி செல்ல ஊக்குவிக்கவுள்ளோம்.

பிரதமரின் பெஸ்ட் புதுச்சேரியாக்க வணிக மையமாக மாற்றவுள்ளோம். சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் புதிய தொழிற்பண்ணை அமைகிறது. மூடப்பட்ட ஏஎப்டி உள்ளிட்ட பஞ்சாலைகளில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஜவுளி பூங்கா, பிஎம்-ஏக்தா மால் என்ற வணிக சந்தை மையம் அமையும். புதிய கல்விக்கொள்கையை வலுவாகவும், திறப்படவும் செயல்படுத்த முனைப்பில் உள்ளோம் என்று குறிப்பிட்டார். அதையடுத்து தேசியகீதம் இசைக்கப்பட்டு ராஜ்நிவாஸுக்கு ஆளுநர் புறப்பட்டார். பேரவை நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT