சென்னை: வழக்கறிஞர் தொழில் உன்னதமான தொழில், வர்த்தகம் அல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நிலப் பிரச்சினை தொடர்பான வழக்கின் உண்மைத்தன்மை மற்றும் வழக்கறிஞர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூரில் நூர்ஜகான் பீவி, ஷேக் மாதர், அப்துல் ஹாசன் ஆகியோருக்கு சொந்தமான 3 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, விலைக்கு வாங்க கமலேஷ் சந்திரசேகரன் என்பவர் ஒப்பந்தம் செய்திருந்தார்.
மீட்கப்பட்ட நிலத்தை தனக்கு விற்காமல் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்க உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். விசாரணையின் போது, எதிர்மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் கணேசன், “மனுதாரர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் ப்ரீத்தி பாஸ்கர் பணியாற்றும் சட்ட நிறுவன உரிமையாளர் சட்டப்படிப்பை படிக்காதவர்” என்பன போன்ற குற்றச்சாட்டை கூறினார்.மேலும், அந்த சட்ட நிறுவனம் நிலப்பிரச்சினை உள்ளிட்ட வழக்குகளில் தீர்வு பெற்றுத் தருவதாக விளம்பரம்
செய்வதாகவும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எதிர்மனுதாரர் வழக்கறிஞர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, வழக்கறிஞர்கள் தங்கள் பெயரை எந்த நிறுவனமும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. வழக்கில் பெற்ற தீர்ப்புகளை சம்பந்தப்பட்ட நீதிபதி புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும். வழக்கறிஞர் தொழில் உன்னதமான தொழில், வர்த்தகமோ, வணிகமோ அல்ல. நீதிமன்றத்தின் அதிகாரியாக திகழும் வழக்கறிஞர், நீதி நிர்வாகத்தில் தலையிடக் கூடாது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீதான குற்றச்சாட்டு குறித்தும், வழக்கின் உண்மைத் தன்மை குறித்தும் சிபிசிஐடி துணை ஆணையர் அந்தஸ்து அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து விரிவாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.