ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கியம் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகிலிருந்த ஆரோக்கியம், செல்வம், ஜெயாஸ்டன், ஜோஸ்வா, சீமோன், முத்துராமன், முகிலன், ஆரோக்கியம், வால்டன், மாரிசெல்வம், ஜெயசூர்யா, ரிபாக்சன், தர்மன், விக்னேஸ்வரன் ஆகிய 14 மீனவர்களை வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
14 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 14 வரையிலும் நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பாம்பனில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று நங்கூரமிடப்பட்டிருந்தன. மேலும் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை. முன்னதாக சனிக்கிழமை பாம்பனில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில், எல்லை தாண்டி சென்று பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.