தமிழகம்

கடற்கரை - தாம்பரம் இடையே இன்று மாலை வரை மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

கடற்கரை - எழும்பூர் இடையே புதியதாக அமைக்கப்பட்டுள்ள 4-வது ரயில் பாதையில் ஆய்வு நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று அதிகாலை முதல் மாலை வரை மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து, ஆய்வு மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கடற்கரை - தாம்பரம் இடையே 9-ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிடத்துக்கு ஒரு பாசஞ்சர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூருக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. மாலை 4.10 மணிக்கு பிறகு மின்சார ரயில் சேவை சீராகும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்: ரயில் சேவை ரத்து செய்யப்படுவதை அடுத்து, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி, தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT