தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 74 ஆயிரத்து 922 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.659 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் இந்த ஆண்டுக்கான முதல் தேசிய லோக் அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஆர்.ஸ்ரீராம் அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவரும், நீதிபதியுமான எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரான நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரது மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந்த லோக்-அதாலத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 3 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு, நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.பரத சக்ரவர்த்தி, என்.செந்தில்குமார் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளி நாயகம், ஏ.ராம மூர்த்தி, எஸ்.கே.கிருஷ்ணன், ஜி.சொக்கலிங்கம், எம்.ஜெயபால், பி.கோகுல் தாஸ் ஆகியோர் தலைமையில் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஆர்.சக்திவேல். எம்.ஜோதி ராமன் தலைமையில் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 431 அமர்வுகள் ஏற்படுத்தப் பட்டு, நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. மொத்தம் 74 ஆயிரத்து 922 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டு, ரூ.659 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 925 பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு அரசுத் துறை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள் பங்கேற்றன. தமிழகம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரான, மாவட்ட நீதிபதி கே.சுதாவும், உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரான மாவட்ட நீதிபதி கிருபாகரன் மதுரமும் செய்திருந்தனர்.