இந்தியை திமுகதான் திணிக்கிறது என தமிழிசை சவுந்தர ராஜன் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தென்சென்னை மாவட்டம் சார்பில் மகளிர் தின விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: அடுத்த ஆண்டு மகளிர் தின விழாவை, பாஜக கூட்டணி ஆட்சியில், பாஜக பெண் அமைச்சர்கள் தலைமையில் கொண்டாடுவோம். தமிழகத்தில் பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், பாஜக கூட்டணி ஆட்சி வர வேண்டும். திமுகவின் குற்றங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு, மொழிப்போர் என்றும், இல்லாத மறுசீரமைப்பையும் எடுத்துக்கொண்டு, மொட்டை வாளுடன், போருக்கு தயார் என திமுக சொல்லிக் கொண்டிருக்கிறது.
பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து கையெழுத்து போடுகிறார்கள். கே.கே.நகரில் கையெழுத்து இயக்கத்தை காவல்துறையினர் தடுத்தபோது, மூன்று மணி நேரம் வெயிலில் நின்றேன். அதன்பிறகு போலீஸ் அனுமதி கொடுத்தது. இதன்மூலம், சுட்டெரிக்கும் சூரியன் எங்களை ஒன்றும் செய்யாது என்பதை நாங்கள் செயலில் காட்டியிருக்கிறோம்.
நமக்கு மூன்றாவது ஒரு மொழி தேவை. ஏனென்றால், அது வாய்ப்புகளை விரிவடைய செய்யும். புதிய கல்விக் கொள்கை என்றாலே, இந்தி இந்தி என்று சொல்வதை நான் மறுக்கிறேன். திணிக்காத இந்தியை நீங்கள் திணித்து கொண்டிருக்கிறீர்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன். பாஜகவுக்கு தமிழ் உயிர் போன்றது. தமிழுக்கு ஒரு பங்கம் என்றால் முதலில் உயிர் கொடுப்பது பாஜக தொண்டராகத்தான் இருப்பார்.
திமுகவினர் கோயிலுக்குச் செல்ல மாட்டோம் என்பார்கள். ஆனால், ஒளிந்து கொண்டு கோயிலுக்கு செல்வார்கள். அதேபோல், அவர்கள் இந்தியையும் ஒளிந்துகொண்டு தான் படிக்கிறார்கள். திமுகவில் வெளியே சொல்வது ஒன்று. உள்ளே நடப்பது ஒன்று. ஆனால், எங்கள் நடவடிக்கை வெளிப்படையாகத்தான் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் பாஜக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும், மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கி, இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.