தமிழகம்

தேசிய அளவில் பெண் கல்வியில் தமிழகம் முதலிடம் பெற்ற திராவிட கட்சிகளே காரணம்: கனிமொழி பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: கவுரிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் திறன் வளர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் வாசுதேவன் தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், முதல்வர் கல்பனா, துணை முதல்வர் ஜானகி, கல்லூரியின் பெண்கள் திறன் வளர் மேம்பாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக துணை பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

பின்னர் கனிமொழி பேசும் போது, "மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளைப் பேசும் தினம், இக்கல்லூரியில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதே நிலை நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும் நிகழ வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் ஏராளமான அரசுக் கல்லூரிகளைத் திறந்து பெண்களின் கல்வி அறிவை மேம்படுத்த உறுதுணை புரிந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பெண்கள் குறைந்தபட்சம் 10-வது வரையாவது கல்வி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் திருமண
உதவித் திட்டம்.

நாட்டிலேயே அதிக அளவாக தமிழகத்தில் 42 சதவீத பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு பெற்று முதலிடத்தில் இருப்பதற்கு, திராவிட கட்சிகள் உருவாக்கிய அடித்தளம்தான் காரணம். தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 'புதுமைப் பெண்' திட்டம், 'தமிழ் புதல்வன்' திட்டம் வாயிலாக மாதந் தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட 'நான் முதல்வன்' திட்டம் மூலம் அவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் அதிகரித்துள்ளது. தமிழக அரசு உங்களுக்காக கொண்டு வந்துள்ள இதுபோன்ற உன்னத திட்டங்களை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT