சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான உற்பத்தி நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை 3-வது நாளாக நடைபெற்றது. இந்த சோதனைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் கலால் வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான அக்கார்டு, எஸ்என்ஜெ, கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், அவற்றின் ஆலைகள், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், முன்னாள் மதுவிலக்கு இணை ஆணையர் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், 2 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை மூன்றாவது நாளாக நேற்றும் நீடித்தது. சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் நா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அத்துமீறலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மும்மொழி கொள்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அமலாக்கத் துறையின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், டாஸ்மாக் குடோன், முன்னாள் மதுவிலக்கு இணை ஆணையர் வீடு என அரசு அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டு மிரட்டும் செயலில் ஈடுபட்டதை, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கடுமையாக ஆட்சேபிக்கிறது.
மேலும், வழக்கு தொடர்பான விசாரணை எல்லையைத் தாண்டி, உயர் அதிகாரிகளையும், பணியாளர்களையும் மன உளைச்சலுக்கும், பதற்றத்துக்கும் ஆளாக்கி வரும் அமலாக்கத் துறையின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.