தமிழகம்

பெண்களை பாதுகாக்க தவறிய திமுக அரசை 2026-ல் மாற்றுவோம்: மகளிர் தினத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை 2026-ல் நாம் அனைவரும் சேர்ந்து மாற்றுவோம் என மகளிர் தினமான நேற்று தவெக தலைவர் விஜய் உறுதியேற்றார். முன்னதாக, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

தவெக தலைவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள எனது அம்மா, அக்கா, தங்கை, தோழி என அத்தனை பேருக்கும் மகளிர் தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம் தானே? பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, எந்த சந்தோஷமும் இருக்காது தானே? என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.

என்ன செய்வது? நாம் அனைவரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்று இப்போது தானே தெரிகிறது. அனைத்தும் இங்கு மாறக்கூடியதுதான். மாற்றத்துக்குரியது தான். கவலை படாதீர்கள். 2026-ல் நாம் அனைவரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம். அதற்கு இந்த மகளிர் தினத்தில் நாம் உறுதி ஏற்போம். எல்லா சூழ்நிலைகளிலும், உங்களுடைய மகனாக, தம்பியாக, தோழனாக உங்களுடன் நான் நிற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மகளிர் தினமான நேற்று அந்தந்த மாவட்டங்களில் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கியிருந்த நிலையில், பல பகுதிகளில் போலீஸார் அனுமதி மறுத்து இருந்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினரை பல இடங்களில் போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதை வலியுறுத்தி, உலக மகளிர் தினத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர். ஆனால் மக்கள் தங்களின் தேவைகளுக்காக கூட போராட்டத்தை நடத்த கூடாது என்ற அராஜக போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களை கைது செய்திருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தவெகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT