சென்னை: தமிழகத்தில் பெண்களின் ஆதரவோடு 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக மகளிரணி சார்பில், சர்வதேச மகளிர் தின விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியை, மகளிரணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில், பூரண கும்ப மரியாதை வழங்கி, அந்த சாலை முழுவதும் மகளிர் வரிசையாக நின்று மலர்தூவி வரவேற்றனர்.
தொடர்ந்து கட்சி அலுவல வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். மகளிர் தினத்தை முன்னிட்டு பலூன்கள் மற்றும் வெண்புறாக்களை பறக்கவிட்டார். மகளிரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 77 கிலோ கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். பின்னர், மகளிர் தின சிறப்புப் பாடல் அடங்கிய குருந்தகட்டை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து மகளிரணி நிர்வாகி ஆர்த்தி மாரியம்மாள் அவுலியா தயாரித்த ‘நெஞ்சமெல்லாம் எடப்பாடியார்: தலைநிமிர் தமிழ்நாடு 2026’ என்ற நூலை வெளியிட்டார்.
மேலும், ஏழை, எளிய மகளிர் 1000 பேருக்கு புடவை மற்றும் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து `மகளிர் நலன் மாற்றம் வேண்டும்’ என்ற ஹேஷ் டேக்கை கையொப்பமிட்டு தொடங்கிவைத்தார்.
பின்னர் பழனிசாமி பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது ஆட்சியில் பெண்களுக்கான நலதிட்டங்கள் பலவற்றை செயல்படுத்தியதால், பெண்கள் ஏற்றம் பெற்றனர். அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒரே பெண் தலைவர் ஜெயலலிதாதான். தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டு வந்து, தமிழகத்தில் பெண் சிசு கொலையை தடுத்தார். இப்படி ஏராளமான மகளிர் நலன் சார்ந்த திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தார். அதிமுக அரசு பெண்களை பாதுகாக்கும் அரசாக இருந்ததது.
இப்போது குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு ஆண்டு கொண்டிருக்கிறது. அதிமுக எப்போதும் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் என்பதை சாதித்து காட்டி இருக்கிறோம். 2026-ல் பெண்களின் பேராதரவோடு மீண்டும் அதிமுக அரசு அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலை, கலைநிகழ்ச்சி, பேண்டு வாத்தியம், செண்டை மேளம் என விழாக்கோலம் பூண்டிருந்தது.
கூட்டணிக்காக தவம் கிடக்கவில்லை: எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், பல கட்சிகள் மறைமுகமாக இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளில் இப்போதே உத்தேச வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிரணி சார்பில் நேற்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமயிடம் இதுபற்றி செய்தியாளர்களிடம் கேட்டபோது, "தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா. தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்" என்றார்.
பின்னர், "அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்றுவரை, எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது" என்றார்