எம்.எல்.ஏ பழனியாண்டி | கோப்புப்படம் 
தமிழகம்

கல்குவாரியில் தொழிலாளி பலியான சம்பவம்: ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டியை விடுவித்த உத்தரவு ரத்து

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கல்குவாரியில் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வான பழனியாண்டிக்கு சொந்தமாக கரூரில் உள்ள கல்குவாரியில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் என்ற தொழிலாளி இறந்தார். இதையடுத்து திருச்சி தொழில் பாதுகாப்புத்துறை துணை இயக்குநர், அந்த குவாரியில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக்கூறி பழனியாண்டிக்கு எதிராக கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், வழக்கில் இருந்து பழனியாண்டியை விடுதலை செய்தது. அந்த உத்தரவை கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது. கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி திருச்சி தொழில் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ‘அந்தக் குவாரியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதால்தான் தொழிலாளி பலியாகியுள்ளார் என்பது சக தொழிலாளர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெளிவாகியுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த வழக்கை கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் மீண்டும் முறையாக விசாரித்து சட்டப்படி தீர்ப்பளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு மறுஆய்வு மனுவை முடித்து வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT