சிவகங்கை: “விஷமத்தனமான சித்தாந்தத்தை விதைக்கவே பாஜக இந்தியை திணிக்கிறது” என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார். மேலும், “பாஜக எத்தனை கையெழுத்து இயக்கம் நடத்தினாலும், அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை” என்று அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கையே தேவையில்லை. அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் படித்தாலே போதும். பாஜகவை தவிர தமிழகத்தில் மற்ற கட்சிகள் இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளியில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினாலும், அதற்கு தேவையான ஆசிரியர்கள் போதிய அளவில் கிடைக்கமாட்டார்கள். இதை காரணம் காட்டி மத்திய அரசே வெளிமாநிலங்களில் இருந்து ஆசிரியர்களை நியமித்து, தங்களது விஷமத்தனமான சித்தாந்தத்தை மாணவர்களிடம் விதைக்கும். தமிழக வரலாறு, கலாச்சாரத்தை பாதுகாக்க பாஜக இந்தி திணிப்பை எதிர்த்தாக வேண்டும். பாஜக எத்தனை கையெழுத்து இயக்கம் நடத்தினாலும், அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை. தேர்தலில் தொடர்ந்து பாஜகவை மக்கள் நிராகரிப்பர். பெரும்பாலான வட மாநிலங்களில் மும்மொழி கொள்கையை பின்பற்றுவது கிடையது. ஆங்கிலம் தெரியாதவர்களே அதிகளவில் உள்ளனர்.
இந்தி தேசிய மொழி அல்ல. அது அலுவல் மொழிகளில் ஒன்றாகத்தான் உள்ளது. உலக நடப்புகள், கண்டுபிடிப்புகளை ஆங்கிலத்தில் தான் படிக்க முடியும். வர்த்தகம், விஞ்ஞானம் ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஆங்கிலம் நன்றாக தெரிந்து கொண்டால் உலகத்தோடு இணைந்து கொள்ளலாம். தமிழை நன்றாக கற்றுக் கொண்டால் கலாச்சாரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகள் கூட, வேண்டுமென்றே இந்தியில் பேசுகின்றனர்.
ரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு என்பது உணர்வுபூர்வமான போராட்டம். தமிழகத்தில் ஓராண்டுக்குள் தேர்தல் வர உள்ளதால், அடிக்கடி அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படும். மொத்தம் 543 தொகுதிகளை அப்படியே மாறாமல் பிரித்தால் தமிழகத்துக்கு 8 தொகுதிகள் குறையும். தொகுதிகளின் எண்ணிக்கையை 888 உயர்த்தினாலும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் 543 பேர் பேச நேரம் கிடைக்காது. மேலும் எண்ணிக்கையை அதிகரித்தால் ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்காது.
தற்போதைய நிலையிலேயே 30 ஆண்டுகள் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. இக்கூட்டணியில் இருந்து யாரும் விலக மாட்டார்கள். ரயில்வே கோரிக்கைகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு பலமுறை கடிதம் கொடுத்தும், அவர் செவி சாய்க்கவில்லை. புதிய ரயில்களை விட, நிறுத்த தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை,” என்று அவர் கூறினார்.