சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரியான சுதாகர், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் பிரிவின் கூடுதல் ஆணையராக பணியிலிருப்பவர் ஆர்.சுதாகர் . இவர், மத்திய அரசு பணிக்கு செல்ல அண்மையில் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இதை தமிழக அரசு ஏற்று சிபாரிசு செய்தது. இந்நிலையில், சுதாகரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஜெனரலாக பணியமர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பதவியில் 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும்வரை சுதாகர் பணியிலிருப்பார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சுதாகர் 2003-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வானவர். சென்னையில் புளியந்தோப்பு, அடையாறு காவல் மாவட்டங்களில் துணை ஆணையராக பணியாற்றி உள்ளார்.
மேலும், சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர், மேற்கு மண்டல ஐஜி உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர் வகித்து வந்த போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பதவிக்கு வேறு ஒருவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.