சென்னை: சென்னை, சைதாப்பேட்டை, சத்யாநகர் பகுதியில் அடையாற்றின் கரையோரம் வசித்த 153 குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடையாற்றின் கரையோரம் வசித்த குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆய்வில், மொத்தம் 29 இடங்களில் 9,539 குடும்பங்கள் வசித்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு முதல் அந்த குடும்பங்கள் படிப்படியாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 20 பகுதிகளை சேர்ந்த 5200 பேர் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 9 பகுதிகளில் இருந்து 3,339 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட வேண்டும். இப்பணி பகுதியாக நேற்று அடையாற்றின் கரையோரம், சைதாப்பேட்டை, சத்யாநகரில் வசித்து வந்த 153 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யும் பணி தொடங்கியது. இக்குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு குடியிருப்பின் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.
இந்தக் குடும்பங்களுக்கு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இடமாற்று உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வாழ்வாதார உதவித்தொகையாக மாதம் ரூ.2500 என ஓராண்டுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது.