கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி ஆராதனையில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் எஸ்.ஜார்ஜ் அந்தோணிசாமி இறைமக்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்துடன் சாம்பலை பூசினார். | படம்: ம.பிரபு | 
தமிழகம்

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது: சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

செய்திப்பிரிவு

சென்னை: கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம், சாம்பல் புதனுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு ஆராதனையும், கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன.

இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்.20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். தவக்காலத்தின் முதல்நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படுகிறது.

திருப்பலி நிறைவேற்றம்: அந்த வகையில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையான நேற்று தொடங்கியது. இதையொட்டி தேவாலயங்களில் நேற்று சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அப்போது இறைமக்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்துடன் சாம்பல் பூசப்பட்டது.

சாந்தோம் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் எஸ்.ஜார்ஜ் அந்தோணிசாமி, பேராலயத்தின் அதிபர் வின்சென்ட் சின்னதுரை ஆகியோர் நிறைவேற்றினர். இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT