தமிழகம்

50 மின் ரயில் சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: புறநகரில் நிறுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் நல சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட மேலாளரிடம் திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்க தலைவர் முருகையன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: சென்னை புறநகரில் மின்சார ரயில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் மின்சார ரயில்கள் இல்லாததால், பயணிகள் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி நடக்க உள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் தடத்தில் 30 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, தாம்பரம் ரயில்வே பணிமனை மேம்பாட்டுப் பணி காரணமாக, கடற்கரை - தாம்பரம் தடத்தில் 20-க்கும் மேற்பட்ட ரயில்களும், மறு அறிவிப்பு வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மின்சார ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.

எனவே, பயணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு, நிறுத்தப்பட்ட மின்சார ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT