சென்னை மெரினா | கோப்புப் படம் 
தமிழகம்

சென்னை மெரினாவில் 28 கிலோ தங்கம் பறிமுதல்: பின்னணி என்ன?

செய்திப்பிரிவு

போலீஸாரின் வாகனச் சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.18 கோடி மதிப்பிலான 28 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் வாகனச் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு மெரினா காமராஜர் சாலையில், அண்ணா சதுக்கம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர்.

காரில் இருந்த 4 பேரிடமும் போலீஸார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, காரை சோதனை செய்தபோது, அதில் தங்க நகைகள் பெட்டிப் பெட்டியாக இருந்தன. இதையடுத்து இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர். இதில், காரில் 28 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் காரில் இருந்தவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நகைக்கடை மேலாளர்கள் பிரகாஷ் (27), கிரண் (27), சவுகார்பேட்டையைச் சேர்ந்த தனியார் நகைக்கடை மேலாளர் அனில் (45) மற்றும் அவர்களது கார் ஓட்டுநர் பெருங்குடி பால் (31) என்பது தெரிந்தது.

பெங்களூருவில் இருந்து சவுகார்பேட்டை, தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக் கடைகளுக்கு விநியோகம் (சப்ளை) செய்ய வந்ததாக பிடிபட்ட 4 பேரும் தெரிவித்தனர். ஆனாலும், கொண்டு வரப்பட்ட நகைக்கு உரிய ரசீதுகள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட 28 கிலோ தங்க நகைகளும் வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.18 கோடி ஆகும். பிடிபட்ட 4 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT