தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து போராடும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை 2026-ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டுக்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, மத்திய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுவரையறை நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுவரையறை நடைபெறலாம். புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டு நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது.
தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?
நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறையை மத்திய அரசு தன்னிச்சையாக முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும். ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற சூழ்நிலை உருவானால் அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இந்த மிக முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும். மேலும் தவெக தொண்டர்கள் தங்கள் இறுதிமூச்சு உள்ளவரை தமிழகத்தின் நலனைக் காப்பார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்பேத்கர் வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்று ‘கூட்டாட்சித் தத்துவமுறை’. ஆதலால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த மறுசீரமைப்பு பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.