குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிர்வாக அலுவலகக் கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், சதீஸ் தவான் விண்வெளி மைய இயக்குநர் ராஜராஜன் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, சொந்த நாட்டு செயற்கைகோள்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் குறைந்த கட்டணத்தில் விண்ணில் செலுத்தி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் தங்கள் செயற்கைகோள்களை ஏவ இந்தியாவை நாடி வருகின்றன. தற்போது, ராக்கெட்களை ஏவுவதற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் மட்டுமே உள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரன்பட்டினத்தில் அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக 2,223 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இஸ்ரோவிடம் வழங்கியது. அந்த இடத்தில் ரூ.986 கோடி மதிப்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அன்றைய தினம் ‘ரோகிணி 6 ஹெச் 200’ என்ற சிறிய வகை ராக்கெட்டை குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள பகுதியில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவினர். தொடர்ந்து, ராக்கெட் ஏவுதளத்தைச் சுற்றி சுவர் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான பெட் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமையும் இடத்துக்கு எதிர்புறம் நிர்வாக அலுவலக கட்டிடம் அமைய உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மைய இயக்குநர் ராஜராஜன் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். இப்பணிகள் ஓராண்டில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.