தங்கச்சிமடத்தில் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் | படம்: எல். பாலச்சந்தர். 
தமிழகம்

தங்கச்சிமடத்தில் 5-வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (மார்ச் 4) ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த பிப்ரவரி 24ம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிப் 28ம் தேதியிலிருந்து தங்கச்சிமடத்தில் இரவு, பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (செவ்வாய்கிழமை) 5-வது நாள் போராட்டத்தில், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாகவும், இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350 என்பதை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தீக்குளிப்பு போராட்டத்தை மட்டும் ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். இன்று இரவு, தங்கச்சிமடம் காத்திருப்பு போராட்ட பந்தலில் மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

SCROLL FOR NEXT