கோப்புப் படம் 
தமிழகம்

மருத்துவ மாணவர்களுக்கு சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகள் வழங்கும் திட்டம்: துணைவேந்தர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து, எலிக்கொல்லி நச்சு மருந்துகளை உட்கொண்டவர்களுக்கு பிளாஸ்மா அணுக்களை மாற்றி சிகிச்சையளிப்பதற்கான பயிற்சி படிப்புகளை தொடங்கி வைத்தார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிவசங்கீதா, நோய்த் தடுப்புத் துறை தலைவர் புஷ்கலா, இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கத்தின் தலைவர் ஸ்ரீசவுஜன்யா, தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டுமையத்தின் இயக்குநர் சஞ்சு தாமஸ் ஆபிரகாம் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி கூறியதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் 45 மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 2,500 பேர் படிப்பை நிறைவு செய்கின்றனர். அவசர கால மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் கல்லூரிக்கு கல்லூரி வேறுபடுகிறது. இதனை ஒழுங்குமுறைப்படுத்தி சீராக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, உயிர் காக்கும் அடிப்படை சிகிச்சைகள், உயிர் காக்கும் மேம்பட்ட சிகிச்சைகள், சிறந்த ஆய்வக சேவைகள், சிறந்த மருத்துவ சேவைகள் ஆகிய நான்கு பிரிவுகளில் பல்கலைக்கழகம் சார்பில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான இணையதள கட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி செயல்பாட்டில் மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதற்கும் மூன்று இணைய ஆய்விதழ்கள் தொடங்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக டிஜிட்டல் ஆரோக்கியம் இணையவழி சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பில் அனைத்து இளநிலை, முதுநிலை மாணவர்களும் சேரலாம். அடுத்ததாக எலிக் கொல்லியை உட்கொண்டவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பைத் தவிர்க்க பிளாஸ்மா அணுக்கள் மாற்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதுதொடர்பான இணையவழி படிப்பையும் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT