கோவை: பெண்கள் பணிபுரியும் இடங்களில் உள்புகார் குழு அமைப்பது கட்டாயம். அவ்வாறு செயல்படாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பவனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தை 2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களில் தனித்தனியான உள்புகார் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். குழு தலைவராக பெண் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாகவும், ஒரு உறுப்பினர் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் குறித்து நன்கு அறிந்தவராகவோ, தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.இதுவரை உள்புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் உடனடியாக குழு அமைத்து தகவல்களை சமூக நல அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். குழு அமைக்காத நிறுவனங்கள் மீது சட்ட விதிகளின்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
உள்புகார் குழு அமைத்துள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஆண்டறிக்கையை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.