புதுச்சேரி: “புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா மையமாக்க ஆராய்கிறோம்” என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
புதுவை ராஜிவ்காந்தி பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் நிறுவப்பட்டு உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று (மார்ச் 3) மருத்துவமனையில் நடந்தது. அப்போது, “புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா மையமாக்க ஆராய்கிறோம்” என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், எம்ஆர்ஐ ஸ்கேனை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் நோயாளிகளின் மூளை, உடல் உறுப்புகள், திசுக்கள் உள் பகுதி பற்றிய தகவல்கள், நோய்கள் உட்பட துல்லியமான விபரங்களை அறியலாம். இதில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் துறை தலைவர்கள், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஆளுநர் கைலாஷ்நாதன், “புதுவையில் 9 மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்ற வசதிகள் இல்லை. புதுவை சுற்றுலா நகரமாக உள்ளது. இதை மருத்துவ சுற்றுலா மையமாக கொண்டு வரலாம். மருத்துவ சேவைகளை ஒருங்கிணைத்து சிறந்த மருத்துவ கேந்திரமாக புதுவையை உருவாக்கலாம். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். அகமதாபாத்தில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த பலர் சிகிச்சைக்காக வருவார்கள்.
பல நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று திரும்புவார்கள். பிரெஞ்சு கலாச்சாரத்துடன் புதுவை தொடர்புடையது என்பதால் பிரெஞ்சு ரீயூனியன் நாடுகளுடன் தொடர்பு ஏற்படுத்தி புதுவையை மருத்துவ கேந்திரமாக மாற்ற ஆலோசித்து, ஆய்வு செய்து வருகிறோம்.அதற்கு ஏற்ற வகையில் நமது மருத்துவமனைகளை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக உருவாக்க வேண்டும். அதற்காக நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்களின் தேவைகளை எனக்கு தெரிவியுங்கள்.” என்றார்.