சென்னை: திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று முதல் தொகுதிதோறும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என துணை முதல்வரும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அன்மையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியை திணிக்கும், நிதிநிலை அறிக்கையில் தமிழகம் என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தை வஞ்சித்து அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சட்டப்பேரவை தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இக்கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளர் ஒருவர், இளம் பேச்சாளர் ஒருவர் என தொகுதிக்கு இரண்டு பேர் பேசவுள்ளனர். அவர்கள், மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், 72-வது பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசுவார்கள். அணி நிர்வாகிகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அன்பகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள துண்டறிக்கையை தொகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகித்து, அவர்களை கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். தமிழ் மக்களின் உரிமைக்கு குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையை தரமறுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும் இந்த பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் உதயநிதி கூறியுள்ளார். இந்த அறிவிப்பின்படி, இன்றுமுதல் 10-ம் தேதி வரை 67 இடங்களில் முதல்கட்டமாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.