தமிழகம்

உலகத் தமிழ் மாநாட்டு குழு தலைவர் நியமனம்: புதுச்சேரி அரசுக்கு பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தமிழுக்கு எதிராக பேசுபவரை உலகத் தமிழ் மாநாட்டு குழுத்தலைவராக நியமிப்பதா என கேள்வி எழுப்பியுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவரை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என புதுச்சேரி அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும், உலகத் தமிழறிஞர்களை ஒன்றிணைக்கும் வகையில் 2 ஆண்டுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 1966 முதல் 2023 வரை 11 உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2023-ல் கோலாலம்பூரில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. புதுவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என 2023 பட்ஜெட்டில் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்படி 12-வது உலகத் தமிழ் மாநாட்டை ஜூலை மாதம் புதுவையில் 3 நாட்கள் நடத்த தமிழ் ஆராய்ச்சி மன்றம் அனுமதித்துள்ளது. மாநாடு குழு தலைவராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாத இறுதியில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை ஆராய்ச்சி மன்ற நிர்வாகிகள் கடந்த வாரம் சந்தித்து ஆலோசித்தனர். இதன் தொடர்ச்சியாக புதுவை முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்தனர்.

சந்திப்புக் கூட்டத்தின்போது 3 நாட்கள் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர், சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், பிஜி, மொரீசியஸ் உட்பட பல நாடுகளில் ஆட்சி பொறுப்பில் உள்ள தமிழ் தலைவர்கள், அறிஞர்கள் என 5 ஆயிரம் பேரை பங்கேற்கச் செய்வது. மாநாட்டு தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் - துணைத் தலைவர் இளங்கோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியதாவது: புதுவையில் 12-வது உலகத் தமிழ் மாநாடு நடத்த முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் ஒரு சதவீதம் கூட புதுச்சேரிக்கும், தமிழுக்கும் தொடர்பில்லாத விவாதங்களில் தொடர்ச்சியாக தமிழ் மொழியை, தமிழர்களை, தமிழ்நாட்டு மாணவர்களை எள்ளி நகையாடுபவரும், இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு அப்பட்டமாக வக்காலத்து வாங்கும் பாஜனதா பிரமுகர் ஸ்ரீகாந்த் என்பவர் மாநாட்டு குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

புதுவை அரசு மறுபரிசீலனை செய்து மாநாட்டுக் குழுவிலிருந்து ஸ்ரீகாந்த்தை உடனடியாக நீக்க வேண்டும். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழுக்காக நாளும் உழைத்திடும் பலரை சேர்த்து, மூத்த தமிழறிஞர் ஒருவரைத் தலைவராக நியமனம் செய்யவேண்டும்.அப்படி செய்யாத பட்சத்தில், ஸ்ரீகாந்த் மாநாட்டு குழவில் தொடர்ந்து நீடித்தால், கடுமையான போராட்டம் நடத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT