தமிழகம்

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மார்ச் 3-ஆம் நாள் திங்கள்கிழமை தொடங்கும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3316 மையங்களில் எழுதும் 8.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இத்தேர்வில் வெற்றி பெறவும், சாதனை படைக்கவும் வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆகும்.

மாணவர்களின் வாழ்க்கையில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவை ஆகும். மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்தத் தேர்வுகள் தான் தீர்மானிக்கின்றன. இதைக் கருத்தில்கொண்டு மாணவச் செல்வங்கள் எந்த பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் கவனமாக படித்து 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT