தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரியில் 86.65 லட்சம் பேர் பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதத்தில் 86 லட்சத்து 65 ஆயிரத்து 803 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.

இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 86 லட்சத்து 65 ஆயிரத்து 803 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக, பிப்.7-ம் தேதி ஒரேநாளில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 300 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 37 லட்சத்து 56 ஆயிரத்து 385 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 14 லட்சத்து 80 ஆயிரத்து 150 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 936 பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6,046 பேரும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 34 லட்சத்து 22 ஆயிரத்து 286 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை, வாட்ஸ்-அப் டிக்கெட் உள்ளிட்ட பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT