சென்னை: தமிழக அரசு சார்பில் மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்றும், அன்றைய தினம் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக கையெழுத்து இயக்கம் தொடங்க இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதம்: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க மார்ச் 5-ம் தேதி திட்டமிட்டுள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக பாஜகவை அழைத்ததற்கு நன்றி. தொகுதி மறுவரையறை நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே தவறாக புரிந்துகொண்டு அதுகுறித்து வேண்டுமென்றே பொய் சொல்லவே இந்த கூட்டத்தைக் கூட்டியுள்ளீர்கள்.
மறுவரையறை எந்த மாநிலங்களையும் பாதிக்காது என அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். தொகுதி மறுவரையறைக்கான அறிவிப்பு ஆணையத்தால் சரியான நேரத்தில் வெளியிடப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டபோதும் நீங்கள் பொய்களை பரப்பி, பின்னர் அந்த பொய்கள் உடைத்தெறியப்பட்ட பிறகும் நீங்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
திமுகவின் நான்காண்டு கால நிர்வாக சீர்கேட்டினால் பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை எதிர்கொள்ள பயந்து, மக்கள் கவனத்தை திசைதிருப்ப, கடந்த ஒரு வாரமாக நீங்கள் பரப்பிய கற்பனையான இந்தித் திணிப்பு நாடகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், திடீரென்று ஒரு நாள் விழித்தெழுந்து, தொகுதி மறுவரையறை குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு திசை திருப்ப முயற்சித்திருக்கிறீர்கள்.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த 848 என்ற எண்ணிக்கை குறித்த ரகசிய ஆவணம் இருந்தால் தமிழக மக்களின் நலனுக்காக அதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். மக்களவை இடங்கள் அதிகரிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
கையெழுத்து இயக்கம்: மக்கள் நலன் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். இன்றைய உங்கள் ஆட்சியுடன் ஒப்பிடும்போது, கடந்த 2006 முதல் 2011 வரையிலான உங்கள் தந்தையாரின் இருண்ட ஆட்சியே சிறப்பாக தெரிவதாக மக்கள் சொல்ல தொடங்கியுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்ற தகவலை நீங்கள் தெரிவிக்கத் தவறிவிட்டீர்கள். இது முழுக்க முழுக்க நீங்கள் பரப்பும் கற்பனையான, ஆதாரமற்ற அச்சம் என்பதால், மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்பதை ஆதரித்து அன்றைய தினம் தமிழக பாஜக கையெழுத்து பிரச்சாரத்தை தொங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.