தமிழகம்

இந்தி திணிப்பை கைவிட வேண்டும்: பிறந்தநாள் செய்தியாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா, முன்னாள் முதல்வரும் தனது தந்தையுமான கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, அவரது தலைமையில் "இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், அண்ணா வழியில் அயராது உழைப்போம்" என திமுகவினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர், நினைவிடத்தில் பணியாற்றுவோருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது, ‘‘தமிழகத்தின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத் தரமாட்டோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். தமிழகத்தின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்!" என முதல்வர் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதற்கிடையே, பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, "எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் தெளிவாகப் பேசியிருந்தேன். மாநிலத்தில் சுயாட்சி வேண்டும். குறிப்பாக இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இருமொழிக் கொள்கையே அமலில் இருக்க வேண்டும். இதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி. நாடு, மாநிலம், மாநில உரிமையைப் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கவலை" என்றார்.

SCROLL FOR NEXT