தமிழகம்

கன்னியாகுமரி இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பரிதாப உயிரிழப்பு

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் அலங்காரப் பணிகளை மேற்கொண்டபோது மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.

குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகேயுள்ள இனயம் புத்தன்துறையில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேர் பவனி இன்று நடைபெறவிருந்தது. இதற்காக, ஆலய வாசலில் அலங்காரம் மேற்கொள்ளும் பணி நேற்று நடைபெற்றது. சிலர் சக்கரங்களுடன் கூடிய 30 அடி உயர இரும்பு ஏணியைப் பயன்படுத்தி பணியில் ஈடுபட்டனர்.

ஏணியை நகர்த்தியபோது அருகிலிருந்த உயரழுத்த மின்கம்பியில் ஏணி உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து ஏணியை உருட்டிச் சென்ற இனயம் புத்தன்துறை விஜயன் (52), ஜங்டஸ் (35), சோபன் (45), மதன்(45) ஆகியோர் அந்த இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடல் தீப்பற்றி எரிந்ததைப் பார்த்தும், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் அங்கு திரண்டிருந்தவர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT