திருமாவளவன் | கோப்புப்படம் 
தமிழகம்

எஸ்.சி, எஸ்.டி அரசுப் பணியாளர் பதவி உயர்வு மசோதா தயாராக இருப்பதாக திருமாவளவன் தகவல்

செ.ஆனந்த விநாயகம்

சென்னை: மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு பட்டியலினம், பழங்குடியினத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் மசோதா தயாராக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள் மாநாடு, சென்னையில் இன்று (மார்ச் 1) நடைபெற்றது. இதில் பங்கேற்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியவது: “அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதும், முற்றாக எதிர்த்து போராடுவதும் மட்டுமே வாய்ப்பாக இருக்கிறது.

எதிர்ப்பு மனநிலையை வீரம் என்று எண்ணுவோர், அது ஒரு நல்ல வியூகம் அல்ல என்பதை உணர வேண்டும். அதிகாரிகள் நம்மிடம் நல்ல பதிலை வழங்குவார்கள். ஆனால் ஒன்றும் நடக்காது. அத்தகைய அதிகாரிகளையும் செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டும். இப்போது 2 எம்.பி., 4 எம்.எல்.ஏ வைத்திருந்தபோதும் நம்மால் கொடியேற்ற முடியவில்லை. விசிக கொடியேற்றும்போது தான் சட்டம் பேசுவார்கள். இதன்மூலம் இன்னும் அரசியல் வலிமை பெறுவதற்கான தேவையை புரிந்து கொள்ள முடிகிறது.

அம்பேத்கரின் அரசியலைப்புச் சட்டமே நடைமுறைக்கு வரவில்லை என்பதே கசப்பான உண்மை. அது நடைமுறைக்கு வந்திருந்தாலே இந்தியா சமத்துவம் பெற்ற தேசமாக உருவெடுத்திருக்கும். சனாதன தர்மம் தான் நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையில் தான் பட்டியலினத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முட்டுக் கட்டை போடப்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்க 164ஏ சட்டப்பிரிவு என்பது மிகவும் முக்கியம். அந்த பிரிவின்படி மாநில அரசு அதிகாரத்துக்குட்பட்டு பட்டியலினம், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியும். இதுதொடர்பாக முதல்வர், தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அண்மையில் கூட தலைமைச் செயலாளரை சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இது தொடர்பான மசோதா தயாராகிவிட்டது. வரக்கூடிய பட்ஜெட்டில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். சட்டம் வந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இதற்காகவே சட்டப்பேரவை, நாடாளுமன்றத்துக்குள் நுழைய வேண்டிய தேவை இருக்கிறது,” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்வில், விசிக எம்.எல்.ஏ-க்கள் சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT